இலங்கை – கொள்கலன் அனுமதியில் ஏற்படும் தாமதங்கள் : பொருட்களின் விலை 20% அதிகரிக்க வாய்ப்பு!
இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்படும் தாமதம் காரணமாக 800 முதல் 1000 வரை கொள்கலன் போக்குவரத்து வாகனங்கள் துறைமுகத்தில் சிக்கித் தவிப்பதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் லாரிகளை அனுமதிப்பதில் ஏற்படும் தாமதங்களுக்கு துறைமுக அதிகாரசபை மற்றும் சுங்கத் திணைக்களத்தின் நிர்வாக பலவீனங்கள் காரணமாகும் என்று சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள குற்றம் சுமத்தியுள்ளார்.
கொள்கலன் லாரிகளை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள நெரிசல் காரணமாக, ஓட்டுநர்கள் கிட்டத்தட்ட ஒரு வாரமாக துறைமுகத்திலேயே தங்க வேண்டியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், கொள்கலன் அனுமதியில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை சுமார் 20% அதிகரிக்கக்கூடும் என்று வார்ஃப் தொழிலாளர் சங்கம் கூறுகிறது.