சாதனை படைத்த இலங்கை சுங்கம் – இலக்கிற்கு மேலான வருமானம்
2025 ஆம் ஆண்டுக்குள் எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை இலங்கை சுங்கம், செப்ரெம்பர் மாதத்திலேயே எட்டி விட்டதென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த செப்ரெம்பர் 30ஆம் திகதியுடன், நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு மேலாக, 117 சதவீத வருமானத்தை பெற முடிந்ததாக சுங்க அதிகாரிகள் நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளனர்.
எதிர்பார்க்கப்பட்ட சுங்க வருவாய் 1,485 பில்லியன் ரூபா என்றும், அந்த செப்ரெம்பர் 30ஆம் திகதிக்குள் 1,737 பில்லியன்ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நாடாளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸநாயக்க கூடியபோதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.
கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் ஒவ்வொரு மாதமும் இலங்கை சுங்கத்தின் வருமானம் கணிசமானளவு அதிகரித்திருப்பதாகவும் அதிகாரிகள் குழுவில் விளக்கமளித்தனர்.
இதற்கு அமைய 2025 ஒக்டோபர் 14ஆம் திகதியாகும்போது வாகன இறுக்குமதியால் அதிக வருமானமாக ரூ.587.11 பில்லியன் கிடைத்திருப்பதாகவும், இது ஒட்டுமொத்த வருமானத்தில் 37 சதவீதம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதற்கமைய ஒக்டோபர் 14ஆம் திகதியாகும்போது 55,447 மோட்டார் கார்கள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதன் ஊடாக ரூ.472.26 பில்லியன் சுங்கவரி வருமானம் கிடைத்துள்ளது. 733 சரக்குப் போக்குவரத்து வாகனங்களின் இறக்குமதியின் மூலம் ரூ.48.67 பில்லியன் வருமானம் கிடைத்துள்ளது.
142,524 மோட்டார் சைக்கிள ; மற்றும் 15,035 முச்சக்கர வண்டிகளின் இறக்குமதியின் ஊடாக முறையே ரூ.30.3 பில்லியனும், ரூ.15.10 பில்லியனும், 1679 பொதுப் போக்குவரத்து பஸ் மற்றும் வான் ரக வாகன இறக்குமதியின் ஊடாக ரூ.12.66 பில்லியன் வருமானம் கிடைத்திருப்பதாகவும் அதிகாரிகள் இங்கு தெரிவித்தனர்.
இலங்கை சுங்கத்தின் எதிர்கால இலக்குகள் மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்திகள் குறித்தும் குழு கவனம் செலுத்தியது. அரசுடமையாக்கப்பட்ட பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு புதிய டிஜிட்டல் கட்டமைப்பை அறிமுகப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது ஏனைய அரசாங்க நிறுவனங்களுக்கும் முன்னுதாரணமானதாக இருக்கும் என குழு சுட்டிக்காட்டியது.





