இலங்கை – கொழும்பில் போலி கல்வி நிறுவனம் மூலம் பல கோடி ரூபாய் மோசடி! யுவதி கைது!
கொழும்பில் போலி கல்வி நிறுவனமொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் அதன் பணிப்பாளராக செயற்பட்ட 24 வயதுடைய பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.
பம்பலப்பிட்டி லொரிஸ் வீதி பகுதியில் அமைந்துள்ள கல்வி நிலையம் ஒன்றே மேற்படி சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், கிரியுல்ல, நாரங்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைகளுக்குத் தேவையான டிப்ளோமா மற்றும் உயர் டிப்ளோமா கல்வியை வழங்குவதாக முகநூலில் விளம்பரங்களை வெளியிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்களை சேர்த்துக் கொண்டு இந்த நிறுவனம் நடத்தப்பட்டு வந்துள்ளது.
சட்டப்பூர்வ அனுமதியின்றி ஒன்லைன் கல்விப் பட்டறைகளை நடத்தி கல்வி கற்பித்த பிறகு போலி டிப்ளோமா சான்றிதழ்களை இந்த நிறுவனம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டில் அல்லது சர்வதேச ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட நியமங்கள் இன்றி இந்த நிறுவனம் நடத்தப்பட்டு வந்துள்ளது. அத்துடன் டிப்ளோமா பாடநெறி ஒன்றிற்கு, பாடத்தின் வகைக்கு ஏற்ப, 100,000 முதல் 4,45,000 ரூபாய் வரை பணம் வசூலிக்கப் பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான 43 முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் அனுமதி பெறப்பட வேண்டும் என்ற போதிலும், அங்கீகாரம் இன்றியும், ஆணைக்குழுவின் பதிவின்றியும் போலியான முறையில் நடத்தப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இந்த சந்தேகநபர் அந்த நிறுவனத்தின் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளதுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து குறித்த மோசடிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்த நிறுவனத்தின் இணைப் பணிப்பாளராக இருந்த மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரை கைது செய்ய பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.