இலங்கை: அறுகம்பே விவகாரம்! பயண ஆலோசனைகள் குறித்து கேள்வி எழுப்பிய காஞ்சன
அறுகம் வளைகுடா பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தலாம் என நேற்று அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், தற்போதைய அரசாங்கத்திற்கு இவ்வாறான சூழ்நிலைகளை கையாளும் அனுபவமும் அறிவும் இல்லை என்பது தெளிவாகின்றது. என முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், வெளிவிவகார அமைச்சும், பொது பாதுகாப்பு அமைச்சரும் தமது பொறுப்புக்களை புறக்கணித்துள்ளனர்.
இந்த பதவிகளை வகிக்கும் நபர்களை ராஜினாமா செய்ய நாங்கள் விரும்பவில்லை, ஆனால் அவர்களின் தவறுகளை திருத்துமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்,” என்று அவர் கூறினார்.
அமெரிக்கத் தூதரகத்தின் ஊடாக இந்த அறிவிப்பு வந்தவுடனே அல்லது உள்ளூர் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்த பின்னரே நாடு எச்சரிக்கப்பட்டதா என காஞ்சன விஜேசேகர கேள்வி எழுப்பினார்.
நேற்றைய தினம் பொலிஸ் மா அதிபர் கூறியது போன்று ஒக்டோபர் 7 ஆம் திகதி தகவல் கிடைத்திருந்தால் எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும்.
மேலும், தென் மாகாணம் உட்பட ஏனைய சுற்றுலா வலயங்களில் அரசாங்கம் ஏன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியது என்பது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும். அமெரிக்க தூதரகம் விடுத்த அறிவிப்பை அடுத்து நேற்று அறுகம் குடா பகுதியில் முப்படையினர் குவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், அதை குறைத்து மதிப்பிடக்கூடாது. பல தூதரகங்கள் பயண ஆலோசனைகளை வழங்கியதைத் தொடர்ந்து, நாட்டிற்கு வரவிருந்த பல சுற்றுலாப் பயணிகள் தங்கள் திட்டங்களை ரத்து செய்தனர்,” என்று அவர் கூறினார்.
“அரசாங்கத்திற்கு அச்சுறுத்தல் பற்றி முன்பே தெரிந்திருந்தால், அவர்கள் பயண ஆலோசனைகளை வழங்குவதைத் தடுத்திருக்கலாம், நாட்டின் சுற்றுலாத் துறைக்கு சேதம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். அவர்களுக்குத் தெரியாமல் அந்த பயண அறிவுரைகள் வழங்கப்பட்டிருந்தால், அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இறுதியாக, சாத்தியமான பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக எந்த விவாதமும் நடைபெறவில்லை என்றால், தூதரக அதிகாரிகளுடன் அரசாங்கம் ஈடுபட வேண்டும், என்றார்.