ஐரோப்பிய நாடொன்றில் நடைபாதைக்கு வேகக் கட்டுப்பாடு – மீறுவோருக்கு அபராதம்
ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியாவில் பாதசாரிகள் மற்றும் சைக்கிளோட்டிகளுக்குப் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நடைபாதைகளைப் பயன்படுத்தும் போது மணிக்கு 6 கிலோமீட்டர் என்ற அதிகபட்ச வேக வரம்பைத் தாண்டக் கூடாது.
இதனை வலியுறுத்தும் வகையில் முன்வைக்கப்பட்ட சட்டப் பரிந்துரையை அந்நாட்டு நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், புதிய சட்டம் அடுத்தாண்டு ஜனவரி முதல் அமுலுக்கு வரவுள்ளது.
6 கிலோமீட்டர் என்ற வரம்பு எல்லையை மீறிப் பயணிப்போருக்கு 100 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டத்தை நாட்டின் பொதுமக்கள் சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக சைக்கிளோட்டிகள் மத்தியில் இந்தச் சட்டம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சைக்கிளோட்டும் சிறுவர்களால் கூட அவ்வளவு மெதுவாகச் செல்ல முடியாது. அந்த வேகத்தில் சென்றால் சைக்கிளை ஓட்டவே முடியாது என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, புதிய சட்டம் நடைமுறைக்கு வரும்போது காவல்துறையினர் இந்த வேக வரம்பை நடைபாதைகளில் எப்படிச் செயல்படுத்துவர் என்பது தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.





