இலங்கை: மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்த சிசு மரணம் குறித்து சிறப்பு விசாரணை
மாத்தறை மாவட்டம், கம்புருகமுவ புதிய வைத்தியசாலையில், பால் குடித்து ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்ட இரண்டு மாதக் குழந்தையொன்றுக்கு சிகிச்சை வழங்க மறுத்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபாலவின் பணிப்புரையின் கீழ் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனை அளவிலான விசாரணையும் நடந்து வருகிறது.
ஜூலை 3 ஆம் திகதி, கம்புருகமுவ வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சிசுவிற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்த துக்ககரமான சம்பவம் இடம்பெற்றது.
பால் ஊட்டப்பட்ட பின்னர் குழந்தைக்கு சிக்கல்கள் ஏற்பட்டதையடுத்து, அவரது பெற்றோர்கள் மாத்தறை மாவட்டத்தின் புதிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால், மருத்துவமனையின் பாதுகாப்புப் பணியாளர்கள் அவசர சிகிச்சைப் பிரிவு செயல்படவில்லை எனத் தெரிவித்து நோயாளியை ஏற்க மறுத்துவிட்டனர்.
ஆம்புலன்ஸைப் பயன்படுத்தவும் அல்லது தங்கள் குழந்தையை உள்ளே அழைத்துச் செல்லவும் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்த போதிலும், அவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.
பின்னர் சுமார் 10 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மாத்தறை பொது வைத்தியசாலைக்கு சிசுவை அழைத்துச் சென்ற பெற்றோர், அங்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாகக் கொண்டுவந்திருந்தால் குழந்தையைக் காப்பாற்றியிருக்கலாம் எனக்கூறிய வைத்தியர்கள் சிசு இறந்துவிட்டதாக அறிவித்தனர்.