சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விசேட அறிவிப்பு
சிங்கப்பூரில் திறந்தவெளியில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மிதமிஞ்சிய வெப்பத்தால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைக்கும் கூடுதல் நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
வெப்பத் தாக்கம் குறித்த சுகாதார அமைச்சின் நிபுணர் குழுவுடன் கலந்து ஆலோசித்து மனிதவள அமைச்சு புதிய நடைமுறைகளை உருவாக்கியுள்ளது.
அவை உடனடியாக நடப்புக்கு வருகின்றன. மிதமிஞ்சிய வெப்பத்துக்கு உடலைப் பழக்கிக் கொள்ளுதல், தண்ணீர் அருந்துதல், ஓய்வெடுத்தல், நிழலில் ஒதுங்கியிருத்தல், ஆகிய 4 அம்சங்களில் அந்த நடவடிக்கைகள் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வெளிப்புற வேலைக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகிக்கொள்ள ஊழியர்களுக்குப் போதிய அவகாசம் கொடுப்பது கட்டாயமாகும். வெளிப்புறங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தண்ணீர் அருந்தவேண்டும்.
உடலில் உருவான வெப்பத்தைத் தணித்துக்கொள்ள, நிழலான பகுதியில் சீரான இடைவெளியில் ஓய்வெடுக்கவேண்டும் எனவும் WBGT என்னும் முறைப்படி ஒவ்வொரு மணி நேரமும் வெப்பத் தாக்கம் கண்காணிக்கப்பட வேண்டும்.
வெப்பத் தாக்கம் 32 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாகப் பதிவாகும் போது அவர்கள், ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 10 நிமிடம் ஓய்வெடுப்பது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.