வெளிநாட்டு உதவி, விநியோக ஏற்பாடு குறித்து விசேட கூட்டம்!
பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு கிடைக்கப்பெறும் வெளிநாட்டு உதவிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கிடைக்க பெற்று வரும் வெளிநாட்டு மனிதாபிமான உதவிகளை ஒருங்கிணைப்பதற்காக வெளிநாட்டு மனிதாபிமான
உதவி ஒருங்கிணைப்புக்கான உயர் மட்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அக்குழு தனது மூன்றாவது கூட்டத்தை அனர்த்த முகாமைத்துவ நிலைய வளாகத்தில் அமைந்துள்ள செயலகத்தில் நேற்று நடத்தியது.
இதன்போதே மேற்படி விவகாரம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவே மேற்படி குழுவுக்கு தலைமை வகிக்கின்றார்.
வெளிநாட்டு நிவாரணப் பொருட்களின் வருகை சரிபார்ப்பு, களஞ்சியப்படுத்தல், ஒதுக்கீடு, மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கிடையே இறுதி கட்ட விநியோகம் வரை முழு நிவாரண விநியோகச் செயற்பாட்டையும் இக்குழு மேற்பார்வை செய்கிறது.
இந்நிலையில் நேற்று நடந்த கூட்டத்தின் போது, தற்போதைய நிவாரண நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயப்பட்டது.
நிவாரண நடவடிக்கையின்போது எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும் மனிதாபிமான உதவிப் பொருட்களை பெறுதல், சேமித்தல் மற்றும் விநியோகித்தல் தொடர்பான விடயங்கள் குறித்தும் விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
மேலும், கிடைக்கப்பெறும் மற்றும் விநியோகிக்கப்படும் அனைத்து நிவாரணப் பொருட்களையும் கண்காணிக்க உதவும் வெளிநாட்டு உதவி கண்காணிப்பு செயல்பாடுகளும் பரிசீலிக்கப்பட்டன.
வெளிப்படைத்தன்மை மற்றும் பயனுள்ள ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்துவதற்காக அமைச்சுகள் மற்றும் அதிகாரிகள் தகவல்களை உடனுக்குடன் புதுப்பிக்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் உயர்மட்ட குழுவின் உறுப்பினர்கள், இலங்கை இராணுவம், பொலிஸ் மற்றும் அரச நிறுவனங்களைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.





