தொழிலுக்காக வௌிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு விசேட அறிவுறுத்தல்

இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக தனியார் முகவர்களின் ஊடாக வெளிநாடு செல்லும்போது 1989 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி குறித்த முகவர் தொடர்பில் அறிந்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்புக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் அண்மையில் நடைபெற்ற வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பங்குபற்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர்.
இதற்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் விஜத ஹேரத் இதனைக் கூறியுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிறுவனங்கள் மற்றும் கட்டணங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் பணியகத்தின் இணையதளத்தில் அறிந்துகொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு தரப்பினரும் அங்கீகரிக்கப்பட்ட தொகையை விட அதிகமாகப் பெற்றுக்கொண்டால் அல்லது அனுமதிப்பத்திரம் இன்றி ஏதேனும் செயற்பாடுகளில் ஈடுபட்டால் பணியகத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என அதிகாரிகளினால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
ரஷ்யாவில் வசிக்கும் இலங்கையர்கள் அந்நாட்டின் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும் இந்த கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டது.