சீனாவுடன் உறவை புதுப்பிக்க முயற்சி- ஜின்பிங்கை சந்திக்கும் தென் கொரிய ஜனாதிபதி லீ
தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் (Lee Jae-myung), சீன ஜனாதிபதி சி ஜின்பிங் (Xi Jinping) ஐ சந்தித்து இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில், பிராந்திய பாதுகாப்பு நிலவரம் மற்றும் கொரிய பாப் கலாச்சாரம் மீது பெய்ஜிங் விதித்ததாக கூறப்படும் அதிகாரப்பூர்வமற்ற தடைகள் குறித்து கலந்துரையாடல் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
சீனா முக்கிய பொருளாதார நாடாக இருந்தாலும், பிராந்திய அரசியல் பதற்றங்களால், அந்த உறவு போர் கருவியாக மாறாது என உறுதிப்படுத்த லீ முயற்சி செய்கிறார் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
2019 க்கு பிறகு தென் கொரியத் தலைவர் ஒருவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும்.
இதனிடையே, தைவான் தொடர்பான உரிமை கோரல் விவகாரத்தில் சீனாவும் ஜப்பானும் கடந்த சில வாரங்களாக இராஜதந்திர மோதலில் ஈடுபட்டு வருகின்றன.
இது தென் கொரியாவை அசௌகரியமான நிலைக்கு தள்ளியுள்ளது.
தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தினால், ஜப்பான் தற்காப்பு நடவடிக்கை எடுக்கலாம் என ஜப்பான் பிரதமர் சானே தகைச்சி (Sanae Takaichi) பாராளுமன்றத்தில் கூறியதைத் தொடர்ந்து, பெய்ஜிங் ஜப்பானுக்கு எதிரான தனது பேச்சுக்களை கடுமைப்படுத்தியுள்ளது.
இந்த சூழலில் பெய்ஜிங்கிற்கு லீ மேற்கொண்டுள்ள இந்த விஜயம் குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.
ஜப்பானைப் போலவே, தென் கொரியாவும் அமெரிக்காவின் நட்பு நாடுகளாகும். அமெரிக்கா தைவானை ஆதரித்து அதன் பாதுகாப்புக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகிறது.





