தேசிய மூலோபாய தொழில்களுக்கு 46 பில்லியன் நிதி வழங்க தென் கொரியா திட்டம்

உலகளாவிய போட்டித்தன்மை, நாட்டைப் பாதுகாக்கும் முனைப்பு ஆகியவை தீவிரமடைந்து வருகிறது.
இதனால், பாதிக்கப்படும் சில்லு உற்பத்தி போன்ற உத்திபூர்வத் தொழில்நுட்பங்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்க தென்கொரியா முடிவுசெய்துள்ளது.
அதன்படி, 50 டிரில்லியன் வான் (S$46 பில்லியன்) மதிப்பிலான காப்புறுதி நிதியமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அந்நாடு புதன்கிழமை (மார்ச் 5) தெரிவித்தது.
இந்நடவடிக்கையை ஆதரிக்கும் வகையில், உலகம் முழுவதிலுமிருந்து அதிநவீன தொழில்நுட்பங்களில் பணிபுரியும் திறனாளர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட புதிய கொள்கைகளையும் தென்கொரிய அரசாங்கம் அறிவித்தது.
மேலும், உலகளாவிய நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவமுள்ள திறமையான வெளிநாட்டினருக்குத் தென்கொரிய நிறுவனங்களில் வேலைசெய்வதற்கு ஏற்ற வகையில் உயர்தர விசாவையும் நிரந்தரக் குடியுரிமையையும் வழங்கவும் அந்நாடு திட்டமிட்டுள்ளதாக ‘ராய்ட்டர்ஸ்’ தெரிவித்தது.