லண்டனில் குடிநீர் தட்டுப்பாடு: தலைமை அதிகாரி பதவி விலக எம்.பி.க்கள் கடும் அழுத்தம்
பிரித்தானியாவின் கென்ட் மற்றும் கிழக்கு சசெக்ஸ் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் கடந்த சில நாட்களாக குடிநீர் இன்றி தவித்து வருகின்றன.
இந்நிலையில், சவுத் ஈஸ்ட் வாட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டேவிட் ஹின்டனுக்கு (David Hinton), 4 லட்சம் பவுண்டுகள் போனஸாக வழங்கப்பட உள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பொருட்படுத்தாமல், அவர் 2030 வரை பதவியில் நீடித்தாலே இந்தத் தொகை வழங்கப்படும் என்ற ஒப்பந்தம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஏற்கனவே சுமார் 30,000 குடும்பங்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த போனஸ் அறிவிப்பு பொதுமக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்வது குறித்து ஆய்வு செய்யுமாறு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு (Ofwat) அமைச்சர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இது ஒரு “மனிதாபிமானமற்ற செயல்” என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர்.
தண்ணீர் தட்டுப்பாட்டைக் கையாளத் தவறிய ஹின்டன் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், அவருக்கு வழங்கப்படவுள்ள போனஸை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.





