பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சாதனை படைத்த தென்னாப்பிரிக்காவின் இந்திய வம்சாவளி வீரர்
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லாகூரில் நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 378 ஓட்டங்கள் சேர்த்து சகல விக்கெட்களையும் இழந்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் தமிழ்நாடு வம்சாவளியை சேர்ந்த செனுரன் முத்துசாமி (Senuran Muthusamy) 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 269 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
109 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 167 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் செனுரன் முத்துசாமி மீண்டும் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

செனுரன் முத்துசாமி 1994ம் ஆண்டு பிப்ரவரி 22 அன்று தென்னாப்பிரிக்காவின் நடால் மாகாணத்தில் உள்ள டர்பனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்தார்.
கிளிஃப்டன் (Clifton) கல்லூரியில் படிப்பை முடித்த அவர், பின்னர் குவா-சுலு நடால் (KwaZulu-Natal) பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
செனுரன் முத்துசாமி, டர்பனில் (Durban) வளரும்போது மிக இளம் வயதிலேயே கிரிக்கெட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார், அங்கு அவர் உள்ளூர் போட்டிகளிலும் பாடசாலை போட்டிகளிலும் சிறப்பாக செயல்படத் தொடங்கினார்.

பின்னர் தனது விளையாட்டை மேம்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்பு அவரை 19 வயதுக்குட்பட்டோர் மட்டத்தில் தென்னாப்பிரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்த வழிவகுத்தது.
அதனை தொடர்ந்து தனது தனிப்பட்ட திறமையால் முன்னேறி தற்போது தென் ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்து சாதனை படைத்து வருகிறார்.





