ட்ரம்பின் சர்ச்சையான கருத்துக்களால் குழப்பத்தில் முடிந்த தென்னாப்பிரிக்க – அமெரிக்க சந்திப்பு

அமெரிக்காவுக்கும் தென்னாப்பிரிக்காவும் இடையிலான பதற்றத்தைத் தணிக்க ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்வைத்த சர்ச்சையான கருத்துகள் நிலைமையை மோசமாக்கியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் உள்ள வெள்ளை இன விவசாயிகள் கொல்லப்படுவதாகவும் துன்புறுத்தப்படுவதாகவும் டிரம்ப் கூறினார்.
அமெரிக்கா, கிட்டத்தட்ட 60 ஆப்பிரிக்கர்களுக்கு அடைக்கலம் தந்து ஒரு வாரம் முடிந்துள்ள நிலையில் தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா அமெரிக்காவுடனான உறவைச் சரிபடுத்த டிரம்ப்பைச் சந்தித்தார்.அப்போது இடம்பெற்ற செய்தி நேர்காணலின்போது தென்னாப்பிரிக்காவில் வெள்ளை இன படுகொலை நடப்பதாகத் டிரம்ப் கூறினார்.
வெள்ளை இன விவசாயிகளுக்கான இடுகாடு என்று கூறப்படும் இடம் என்று கூறி காணொளி ஒன்றைத் டிரம்ப் காட்டினார். இருப்பினும் அது தென் ஆப்பிரிக்காவின் எந்தப் பகுதியில் எடுக்கப்பட்டது என்பதை அவர் குறிப்பிடவில்லை.
தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை இன மக்கள் தாக்கப்பட்டது குறித்த சம்பவங்களைச் சொல்லும் பிரசுரங்களையும் டிரம்ப் ராமபோசாவிடம் கொடுத்தார். அது பற்றி விளக்கம் தரும்படியும் டிரம்ப் சொன்னார்.
இவ்வாண்டுத் தொடக்கத்தில் சர்ச்சைக்குரிய சட்டத்துக்குத் ராமபோசா ஒப்புதல் அளித்தார். அது, ஒரு சில கட்டங்களில் இழப்பீடு எதுவும் வழங்கப்படாமல் தனியார் நிலங்களை அரசாங்கம் கைப்பற்ற அனுமதிக்கிறது.அதற்குப் பதிலளித்த ராமபோசா, “எங்கள் நாட்டில் குற்றங்கள் புரியப்படுகின்றன. குற்றச் செயல்கள் மூலம் கொல்லப்படுவோர் வெள்ளை இனத்தவர் மட்டுமல்ல, பெரும்பாலோர் கறுப்பினத்தவர்,” என்றார் அவர்.
அமெரிக்காவுடனான வர்த்தக உறவை மேம்படுத்துவதில்தான் கவனம் செலுத்துவதாக புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு முன் ராமபோசா சொன்னார்.
டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தியுள்ள இறக்குமதி வரிகள் ஜூலை மாதம் மீண்டும் நடப்புக்கு வரும்போது அமெரிக்காவுக்குள் செய்யப்படும் அனைத்து தென் ஆப்பிரிக்க இறக்குமதிகள்மீதும் 30% வரி விதிக்கப்படும்.