மன அழுத்தத்தை உருவாக்கும் சமூக வலைதளங்கள்!
சமூக வலைதளங்கள் மனித மூளைகளை ஆக்கிரமித்து மூளையின் செயல்பட்டை குறைப்பதாக அதிர்ச்சியூட்டும் ஆய்வு தகவல் வெளியாகி உள்ளது.
ஜெர்மனி நாட்டின் மனநல மையமும் ரூர் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வில் சமூக வலைதளங்கள் மனித மூளைகளின் செயல்பாட்டை குறைக்கின்றன. மேலும் மனித மூளையின் சிந்திப்புத் தன்மையை குறைத்து, அவற்றை மழுங்கடித்து வருகின்றன.
இது மட்டுமல்லாது 30 நிமிடத்திற்கு அதிகமாக சமூக வலைதளத்தை பயன்படுத்தும் ஒரு நபர் கவனச் சிதறல் கொண்டவராகவும், பணிச்சுமைக்கு உள்ளாகவும், பணியின் மீது கவனம் குறைந்த நபராகவும் காணப்படுகிறார். இதன் மூலம் இவருடைய பணியின் செயல் திறன் குறைகிறது. இதனால் பணியில் அவருக்கு அதிருப்தி ஏற்பட்டு மன அழுத்தத்தை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இது பிறகு பொருளாதார ரீதியான சரிவுகளை ஏற்படுத்தி, குடும்பப் பிளவுகளுக்கான ஒரு காரணியாக இருக்கிறது.
மேலும் சமூக வலைதளத்தை 35 நிமிடத்திற்கு மேல் தொடர்ச்சியாக பயன்படுத்தும் நபர் குறிப்பிட்ட சமூக வலைத்தளத்திற்கு அடிமையான நபராக கருதப்படுகிறார். இப்படியான நபர் அடிக்கடி தொலைபேசிகளின் வழியாகவும் அல்லது கணினியாகவும் அடிக்கடி சமூக வலைதளத்திற்கு சென்று பார்வையிடுகிறார். சமூக வலைதளங்களை பயன்படுத்த இயலாத சூழல் ஏற்படும் போது மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, சமூக வலைதளத்தை மீட்டெடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கையை மட்டுமே தனது முழு நேர பணியாக மேற்கொள்கிறார்கள்.
மேலும் சமூக வலைதளங்கள் நிஜ வாழ்க்கையை சிதைத்து, உரையாடல்களை குறித்து உண்மைக்கு மாறானதாக உருவாகி இருக்கிறது என்று அந்த ஆய்வு அறிக்கையில் கண்டறியப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கைக்காக 35 நிமிடத்திற்கு அதிகமாக சமூக வலைதளங்கள் பயன்படுத்தும் 166 நபர்கள் தொடர்ச்சியாக 30 நாட்கள் கண்காணிக்கப்பட்டு ஆய்வு முடிவு தயாரிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.