தோல் புற்றுநோயை குணமாக்கும் சோப்… 14 வயது இளம் விஞ்ஞானிக்கு பாராட்டுக்கள்!
தோல் புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் சோப்புக்கட்டியை உருவாக்கிய 14 வயது இளம் விஞ்ஞானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தோல் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ சோப்பினை உருவாக்கியதற்காக, அமெரிக்காவை சேர்ந்த ஹேமன் பெக்கலே என்னும் 9ம் வகுப்பு மாணவர் ’சிறந்த இளம் விஞ்ஞானி’ என்ற மதிப்புமிக்க பட்டத்துடன் 25,000 அமெரிக்க டொலர் ரொக்கப் பரிசையும் பெறுகிறார்.
வர்ஜீனியாவின் அன்னாண்டேலில் உள்ள உட்சன் உயர்நிலைப் பள்ளியில் ஹேமன் பெக்கலே ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். தோல் புற்றுநோயை நிவர்த்தி செய்ய பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு புதுமையான சோப்பை இவர் உருவாக்கி உள்ளார். மெலனோமா என்னும் தோல் புற்று நோய்க்கு சிகிச்சையளிக்கும், மருத்துவகுணம் நிரம்பிய இந்த சோப்புக்கட்டி ஒன்றினை தயாரிப்பதற்கு சொற்ப செலவே ஆகும். இதன் மூலம் 10 டொலர் விலையில் இதனை பாதிக்கப்பட்டவர்கள் பெற முடியும்.
தோல் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான சோப்பினை உருவாக்கும் சிந்தனை யோசனை ஹேமனின் குழந்தைப் பருவத்திலேயே உதித்திருக்கிறது. ஆப்ரிக்க அமெரிக்கரான ஹேமன், தனது வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளை கழித்த எத்தியோப்பியாவில் அதற்கான யோசனை உருவாகி இருக்கிறது. அங்கு அதிகளவில் வெயிலில் உழைக்கும் மக்களையும் அவர்களுக்கு ஏற்பட்ட புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளையும் பார்த்து வளர்ந்ததில், அவற்றை குணப்படுத்துவதற்கான ஆய்வுகளை சிறுவயது முதலே மேற்கொண்டு வந்திருக்கிறார்.
தான் கண்டறிந்த மருத்துவ சோப்பினை பயன்படுத்தி ஹேமன் வணிகநோக்கில் பயனடைய விரும்பவில்லை. மாறாக தேவைப்படுவோருக்கு விநியோகிக்கும் வகையில் ஒரு லாபநோக்கற்ற நிறுவனத்தை உருவாக்க ஹேமன் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.