சீனாவை உலுக்கிய பனிப்பொழிவு – 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்பு
சீனாவின் – ஷாங்காய் நகரில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆகக் குளிரான மாதத்தைப் பதிவுசெய்ய இருக்கிறது.
இந்த நிலையில் மிகக் குறைந்த வெப்பநிலை, காற்று குறித்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சீனாவின் வட நகரங்களில் பனிக்கட்டிகள் சூழ்ந்த நிலவரம் அடுத்த வாரம்தான் மேம்படும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
ஷாங்காயின் நகர்ப்புறங்களில் வியாழக்கிழமை வெப்பநிலை -4 டிகிரி செல்சியஸ் முதல் -6 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தது.
நாள் முழுவதும் அங்கு வெப்பநிலை பூஜ்ஜியத்துக்குக் கீழேயே இருக்கும் என்று ஷாங்காய் வானிலை ஆய்வு மையம் அதன் சமூக ஊடகத் தளத்தில் குறிப்பிட்டது.
வடசீனாவில் உள்ள பகுதிகளைவிட ஷாங்காயில் வானிலை சற்று வெப்பமாக இருந்தாலும் அங்கு கடுங்குளிர் நிலவுவது வழக்கத்திற்கு மாறானது.
ஷாங்காயின் மையப் பகுதியில் வரும் திங்கட்கிழமை வரை குறைந்தபட்ச வெப்பநிலை தொடர்ந்து பூஜ்ஜியத்துக்குக் கீழ் இருக்கும் என தான் எதிர்பார்ப்பதாக நகர வானிலை மையம் தெரிவித்தது.
சைபீரியாவிலிருந்து வீசிய கடுங்குளிர் காற்றால், கடந்த வார நடுப்பகுதியில் இருந்து சீனா முழுவதும் குளிர்ந்த வானிலை நிலவி வருகிறது.
இதனால் பல வட நகர்களில் வெப்பநிலை -30 டிகிரி செல்சியஸ் வரை சரிந்தது. வடஅமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நிலவும் கடும் பனிப்பொழிவைவிட சீனாவில் நிலவரம் சற்று மேம்பட்டதாக இருந்தாலும், அங்கு கடுங்குளிர் நிலவரத்தால் சாலை, ரயில், விமானப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
மேலும், வடமேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகளுக்கும் இடையூறு ஏற்பட்டது.
வடசீனாவில் வீசிய குளிர்காற்று காரணமாக ஷான்ஸி மாநிலத்தில் உள்ள சிற்றூரான யுவான்குவில் டிசம்பர் 13ஆம் திகதி திடீரென மின்தடை ஏற்பட்டது. அந்த அரிய மின்தடை மூன்று நாள்களுக்கு நீடித்தது.
மின்சார வசதி இல்லாததால் குடியிருப்பாளர்கள் சூடான உணவு சமைக்க முடியாமல் அவதியுற்றதாக சீன ஊடகங்கள் தெரிவித்தன.