ஜப்பானில் அச்சுறுத்தலாக மாறிய பனிப்பொழிவு – விமானங்கள் பறக்க முடியாத நிலை
ஜப்பான் தலைநகர் டோக்கியோ (Tokyo) உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளமையினால் பல விமானப் பயணங்கள் இரத்துசெய்யப்பட்டுள்ளன.
அங்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிவருவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதனால் மலைப் பகுதிகளில் இன்னும் அதிகமாகப் பனி கொட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பாதிக்கப்படும் இடங்களில் 24 மணி நேரத்துக்குள் 40 செண்டிமீட்டருக்கும் அதிகமாகப் பனி படரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தலைநகர் டோக்கியோவிலும் அதே நிலைதான். அங்கு 8 செண்டிமீட்டர் அளவுக்குப் பனி பொழியும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
தோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்துக்குச் செல்லும் 47 இருவழி விமானப் பயணங்கள் ரத்துசெய்யப்பட்டுவிட்டன. ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சில ரயில்கள் தாமதமாக வரலாம். சில ரத்துசெய்யப்படலாம் என்று ரயில் நிலைய அதிகாரிகள் கூறினர்.
விரைவுச்சாலைகளில் சில பாதைகள் மூடப்படலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
வாகனங்களுக்குக் குளிர்காலத்தில் பயன்படுத்தப்படும் டயர்களைப் பொருத்தி வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வாகனமோட்டிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.