இந்தியாவில் மனிதன் கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்த பாம்பு!!
பீகாரின் நவாடா மாவட்டத்தில் உள்ள ஒரு ரயில்வே ஊழியர், வாழ்வா சாவா போராட்டத்தில் தன்னைக் கடித்த பாம்பைத் திருப்பி கடித்ததில் பாம்பு இறந்தது. அவ்வாறு செய்வது விஷத்தின் தன்மையை மாற்றும் என்பது உள்ளூர் கிராமப்புற மக்களின் நம்பிக்கையாக கருதப்படுகிறது.
பீகாரின் நவாடா மாவட்டத்தில் ராஜவ்ளி வனப்பகுதியில் ரயில் தண்டவாளம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட 35 வயதான சந்தோஷ் லோஹரும், அவரது நண்பர்களும் இரவு உணவைச் சாப்பிட்டுவிட்டு அங்கு உறங்கிக் கொண்டிருந்துள்ளனர். அந்த வனப்பகுதியில் இருந்த பாம்பு ஒன்று சந்தோஷ் லோஹரைக் கடித்துள்ளது. பாம்பு கடித்தவுடனேயே வேகமாக செயல்பட்ட சந்தோஷ் லோஹர் அந்த பாம்பைப் பிடித்து இரண்டு முறை கடித்துள்ளார்.
கடித்தவுடனேயே அந்தப் பாம்பு பரிதாபமாக இறந்தது. அருகில் இருந்த அவரது நண்பர்கள் சந்தோஷ் லோஹரை மீட்டு ராஜவ்ளி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரைப் பரிசோதித்து சிகிச்சையளித்த மருத்துவர் சின்ஹா, அவர் நலமுடன் இருப்பதாகக் கூறினார்.
இந்த விநோத சம்பவத்தில் விஷமுள்ள பாம்பு கடித்தால், அதைத் திருப்பி கடிப்பதால் அந்த விஷம், பாம்பிற்கே திரும்பி போய்விடும் என்ற நம்பிக்கை கிராமப்புற மக்களிடம் இருப்பது வேடிக்கையாக இருந்தாலும், அவரின் விரைவான சிந்தனை அவரது உயிரைக் காப்பாற்றியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.