தண்ணீர் தொட்டியில் கண்டறியப்பட்ட எலும்புக்கூடு; கேரளா பல்கலைக்கழக வளாகத்தில் அடுத்தடுத்து புலப்படும் மர்மம்..!
கேரளா பல்கலைக்கழகத்தின் கரியாவட்டம் வளாகத்தில் தண்ணீர் தொட்டியில் இருந்து ஓராண்டுக்கு முன் இறந்தவரின் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளது மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட ஒரே பொறியியல் கல்லூரி வளாகம் கரியாவட்டம் பகுதியில் இயங்கி வருகிறது. இங்குள்ள தாவரவியல் பிரிவில் தண்ணீர் தொட்டி ஒன்று மாணவர்களின் பயன்பாட்டிற்காக செயல்பட்டு வந்தது. சுமார் 20 அடி ஆழமுள்ள இந்த தொட்டி, கடந்த ஆண்டு புதிய தொட்டி ஒன்று கட்டப்பட்டதால் பயன்பாடின்றி இருந்து வருகிறது. இந்த நிலையில் கல்லூரி வளாகத்தில் பம்ப் ஆப்ரேட்டர் ஒருவர் நேற்று வழக்கமான ஆய்வில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது பயன்பாடு இல்லாமல் இருந்து வரும் அந்த தொட்டியின் அருகே சென்று பார்த்தபோது, தொட்டியின் மூடி திறந்து கிடந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் உள்ளே டார்ச் லைட் அடித்துப் பார்த்துள்ளார். அப்போது எலும்புக்கூடு ஒன்று உள்ளே கிடைப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.இது தொடர்பாக உடனடியாக கல்லூரி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கல்லூரியின் கூடுதல் பதிவாளர் இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் தண்ணீர் தொட்டியின் உள்ளே கிடந்த எலும்புக்கூட்டை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவர்களின் முதற்கட்ட சோதனையில் அந்த எலும்புக்கூடு சுமார் ஓராண்டு பழையதாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து எலும்புக்கூடு கிடந்த பகுதியின் அருகேபொலிஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தலச்சேரி பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் கண் கண்ணாடிகள், தொப்பி மற்றும் பை ஆகியவை கிடந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த பொலிஸார் மாயமான மாணவர் யார் என்பது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த மாணவர் தொட்டியில் உள்ளே இறங்கி, ஏணியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர். சுமார் ஓர் ஆண்டுக்கு மேலாக அந்த தண்ணீர் தொட்டி பயன்பாடு இல்லாமல் இருந்ததால் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கரியாவட்டம் வளாகத்தில் இதுபோன்ற சம்பவம் நிகழ்வது இது முதல் முறை அல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே வளாகத்தில் இரண்டு மரங்களுக்கு இடையே தூக்கிட்ட நிலையில் எழும்புக்கூடு ஒன்று நீண்ட நாட்களுக்கு பிறகு கண்டறியப்பட்டது. அப்போது நடத்தப்பட்ட விசாரணையில், களக்கூட்டம் பகுதியில் சுற்றித்திரிந்து வந்த ஆதரவற்ற நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் வழக்கை முடித்து வைத்திருந்தனர்.
இந்த நிலையில் அடுத்தடுத்து கல்லூரி வளாகத்திற்குள் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டு வருவது, மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி வளாகத்தில் சோதனைகளை அதிகரிக்கவும், பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.