காசாவிற்கு மனிதாபிமான உதவிக்கான வாய்ப்புகளை சிங்கப்பூர் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது: MFA
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிலவிவரும் வேளையில், காஸாவுக்கு மனிதாபிமான உதவி வழங்குவதற்கான வாய்ப்புகளை சிங்கப்பூர் தொடர்ந்து ஆராயும் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன ஆணையத்துக்கான சிங்கப்பூரின் சிறப்புப் பிரதிநிதி ஹவாஸி டயிப்பி, பாலஸ்தீனத்துக்கான மனிதாபிமான உதவி குறித்து ஜோர்தானில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) நடந்த கூட்டம் ஒன்றில் பங்கேற்றதாக புதன்கிழமை (ஜூன் 12) வெளியிட்ட அறிக்கையில் அமைச்சு கூறியது.
ஜோர்தான் மாமன்னர் இரண்டாம் அப்துல்லா, எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தா அல் சிசி, ஐக்கிய நாட்டுத் தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டாரெஸ் ஆகியோர் இணைந்து நடத்திய அந்தக் கூட்டம், காஸாவில் தொடரும் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான தேவைகளைக் கவனிக்க முனைந்தது. நிவாரண முயற்சிகளுக்கு அனைத்துலகச் சமூகம் எவ்வாறு ஆதரவளிக்க முடியும் என்பதையும் அது அறிய முற்பட்டது.
அக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், “மனிதாபிமான அடிப்படையில் உடனடி போர்நிறுத்தத்திற்கான தனது அழைப்பை சிங்கப்பூர் வலியுறுத்திக் கூறுகிறது.
“காஸாவில் பாதிக்கப்பட்ட குடிமக்களுக்கு மனிதாபிமான உதவி அவசரமாக, பாதுகாப்பாக, தடையின்றி வழங்கப்பட அனைத்துத் தரப்பினரும் அனுமதிக்குமாறு சிங்கப்பூர் அறைகூவல் விடுக்கிறது.
“காஸாவில் பிணைக்கைதிகள் அனைவரும் உடனடியாக, பாதுகாப்பாக, நிபந்தனையின்றி விடுவிக்கப்படவும் நாங்கள் தொடர்ந்து கோருகிறோம். நீண்டகாலமாக நடைபெறும் துன்பம் முடிவுக்கு வர நாங்கள் விரும்புகிறோம்,” என்று திரு ஹவாஸி கூறினார்.
இரு நாடு தீர்வுக்கு சிங்கப்பூரின் ஆதரவை அவர் மறுபடியும் எடுத்துக் கூறினார்.“இஸ்ரேல்-பாலஸ்தீன பூசலுக்கு முழுமையான, நிலையான தீர்வுக்கு இதுவே சாத்தியமான ஒரே வழி,” என்றார் அவர்.