நர்கஸ் முகமதியை ( Narges Mohammadi) விடுவிக்கக்கோரி கையெழுத்து போராட்டம்!
நோபல் பரிசு பெற்ற நர்கஸ் முகமதி (Narges Mohammadi) மற்றும் பிறரை ஈரானிய பாதுகாப்புப் படையினர் “வன்முறையாகக் கைது செய்ததை” கண்டித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசியல், சமூக மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் மனுவொன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.
2023 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமதி, வழக்கறிஞர் கோஸ்ரோ அலிகோர்டியின் நினைவு விழாவில் கலந்து கொண்டபோது கைது செய்யப்பட்டார்.
1989 முதல் இஸ்லாமிய குடியரசின் உச்ச தலைவராக பணியாற்றி வரும் அயத்துல்லா அலி கமெனியின் (Ayatollah Ali Khamenei) கொள்கைகளை விமர்சிக்கும் சமூக செயற்பாட்டாளர்களில் முகமதியும் ஒருவர்.
கட்டாய ஹிஜாப் மற்றும் மரணதண்டனை உள்ளிட்ட ஷரியா அடிப்படையிலான சட்டங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்த முகமதி, டிசம்பர் 2024 வரை தெஹ்ரானின் எவின் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் மருத்துவ விடுப்பில் விடுவிக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது மீளவும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





