செர்பிய நாடாளுமன்றத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு ; ஒருவர் படுகாயம்

செர்பியாவில் இன்று(22) பெல்கிரேடில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக்கின் ஆதரவாளர்களால் அமைக்கப்பட்ட கூடாரத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதில் ஒருவர் படுகாயமடைந்தார்.
இந்த துப்பாக்கி சூட்டில் 57 வயதான முதியவர் படுகாயமடைந்தார். உடனடியாக விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர், முதியவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றம் அருகே நடந்த இந்த துப்பாக்கி சூட்டை பயங்கரவாத தாக்குதல் என ஜனாதிபதி விவரித்தார்.
கடந்த ஆண்டு நவம்பரில் நோவி சாட் நகரில் ரயில் நிலைய விதானம் இடிந்து விழுந்ததில் 16 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் அரசாங்கத்தின் புறக்கணிப்பு மற்றும் ஊழல் மீது குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து வுசிக்கிற்கு எதிராக ஒரு வருடமாக மிகப்பெரிய தெரு போராட்டங்கள் நடந்து வருகின்றன.
அதேவேளை, ஜனாதிபதியின் கட்சியை சேர்ந்தவர்கள் அவருக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.