அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை: வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ!
																																		அமெரிக்காவின் இண்டியானா நகரின் சாலையில் வைத்து இந்தியர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் பெயர் கவின் தசூர். 29 வயதாகும் இவர், புதிதாக திருமணம் ஆனவர் எனக் கூறப்படுகிறது. இவர், மெக்சிகோவைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது மனைவியுடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது இண்டியானா நகரின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சாலையில் மற்றொரு கார் ஓட்டுநருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சிக்னலில் அவருடன் தசூர் சண்டைக்கு செல்ல அப்போது அந்த நபர் துப்பாக்கியால் சுட்டதில் தசூர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தசூர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் தசூர் தனது காரில் இருந்து துப்பாக்கியுடன் இறங்குவதையும், டிரக் டிரைவரை அவர் திட்டுவதையும் காட்டுகிறது. அப்போது பிக்கப் டிரக்கின் டிரைவர் அவரை துப்பாக்கியால் சுடும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது.
தசூர் ஆக்ராவை சேர்ந்தவர். அவர் மனைவி விவியானா ஜமோராவை இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜூன் 29 அன்றுதான் திருமணம் செய்தார். இந்த நிலையில் இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. குற்றவாளியை கைது செய்துள்ளதாக அமெரிக்க காவல்துறை தெரிவித்துள்ளது.
        



                        
                            
