நியூயார்கின் உயர்மாடிக் கட்டடத்தில் துப்பாக்கிச் சூடு: காவல்துறை அதிகாரி உட்பட நால்வர் பலி

அமெரிக்காவில் நியூயார்க்கின் உயர்மாடிக் கட்டடத்திற்குள் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டனர். மிட்டவுன் மன்ஹாட்டன் பகுதியில் என்எஃப்எல் (NFL) தலைமையகமும் பெரிய நிதி நிறுவனங்களும் அமைந்துள்ள கட்டடத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்ததாக நியூயார்க் அதிகாரிகள் தெரிவித்தனர். துப்பாக்கியால் சுட்ட சந்தேக நபரும் பின்னர் உயிரிழந்ததாக அவர்கள் கூறினர்.
மரணமடைந்த அதிகாரி நியூயார்க் காவல்துறையைச் சேர்ந்தவர் என்று ராய்ட்டர்ஸ் ஊடகம் அறிகிறது.
நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் ‘எக்ஸ்’ (X) தளத்தில் வெளியிட்ட காணொளிப் பதிவில் சம்பவத்தின்போது பலர் காயமுற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிறிது நேரத்திற்குப் பின்னர் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்ட நியூயார்க் காவல்துறை ஆணையர் ஜெஸ்ஸிக்கா டிஸ்ச் தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சந்தேக நபர், 27 வயது ஷேன் தமுரா , தன்னைத்தானே சுட்டுக்கொண்டு மாண்டதாகக் கூறப்பட்டது.
சம்பவ இடத்திற்குச் செல்வதைத் தவிர்க்குமாறு நியூயார்க் காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.