இந்தியாவில் இறந்ததாக கருதிக் கொள்ளி வைக்கும் நேரத்தில் கண்விழித்த பெண்ணால் அதிர்ச்சி
இந்தியாவின் ஒடிஷா (Odisha) மாநிலத்தில் இறந்ததாக நம்பப்பட்ட ஒரு பெண்ணுக்குக் கொள்ளி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போது கண்விழித்து அனைவரையும் அதிர்ச்சிக்காளாக்கியுள்ளார்.
52 வயதுப் பெண் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு கண்விழித்துள்ளார்.
இம்மாதம் முதலாம் திகதி தீச் சம்பவத்தில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பணப் பற்றாக்குறையின் காரணமாக அவரின் கணவர் சிபாராம் பாலோவால் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க இயலவில்லை. தனால் பாலோ மனைவியை வீட்டிற்குக் கொண்டுசென்றுள்ளார்.
இம்மாதம் 12ஆம் திகதி மனைவி கண் திறக்கவில்லை என்றும் அவர் பேச்சுமூச்சின்றிக் கிடந்ததாகத் தென்பட்டது என்றும் பாலோ தெரிவித்தார்.
மனைவி இறந்திருக்கக்கூடும் என்று தவறாக நினைத்து இறுதிச் சடங்கு நடத்த அவர் திட்டமிட்டிருந்தார்.
மருத்துவரை அணுகாமல் இறப்புச் சான்றிதழைப் பெறாமல் பாலோ அவ்வாறு செய்திருந்தார். கொள்ளி வைப்பதற்குச் சில மணித்துளிகளுக்கு முன்னர் மனைவி திடீரென்று கண் விழித்ததாகப் பாலோ கூறினார்.
அந்தப் பெண் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.