எனது கைது மக்களுக்கு அதிர்ச்சியை தந்தது ; விடுதலையின் பின் டக்ளஸ் உருக்கம்
தன்னைத் திடீரெனக் கைது செய்தமை தனது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், நேற்று பிணையில் விடுதலையான நிலையில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தனது விடுதலைக்காக உழைத்த சிரேஷ்ட சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும் தீர்ப்பளித்த நீதவானுக்கு அவர் நன்றிகளைத் தெரிவித்தார்.
அத்துடன் பல காரணங்களுக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் அவர் தனது நன்றியைப் பகிர்ந்து கொண்டார்.
2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, பாதாள உலகக் கும்பல் தலைவன் மாகந்துர மதூஷிடம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி அவர் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





