சிங்கப்பூரில் வேலைக்கு செல்ல முயற்சித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

சிங்கப்பூரில் மாதம் 3,300 வெள்ளிச் சம்பளத்துக்குச் சமையல் வேலை கிடைத்துவிட்டதாக நினைத்த மலேசியர் ஒருவர் கம்போடியாவுக்குக் கடத்தப்பட்டுள்ளார்.
அந்த 25 வயது நபருக்கு 3 மாதக் குழந்தை இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிணைத்தொகை தராவிட்டால் அவர் மீண்டும் விற்கப்படுவார் என்று கடத்தல் கும்பல் மிரட்டியதாக தெரியவந்துள்ளது.
குறித்த நபர் மார்ச் மாதம் 5ஆம் திகதி சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் தங்குமிடம் பற்றி அவர் தங்களிடம் தெரிவிக்கவில்லை என அவரின் மாமியார் குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் 22ஆம் திகதி மருமகனிடமிருந்து குறுஞ்செய்தி வந்ததாக மாமியார் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் கம்போடியாவுக்குக் கடத்தப்பட்டு விட்டதாகவும் 9,300 வெள்ளி பிணைப்பணம் வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மருமகனிடம் Whatsapp காணொளி அழைப்பில் பேசியதாகவும் அவர் உடல்நிலை மோசமாக இருப்பதை உணர முடிந்ததாகவும் மாமியார் கூறினார்.
குறித்த நபர் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்று அவரின் 21 வயது மனைவி காத்திருக்கிறார். மாமியார் பொலிஸார் உதவியை நாடியிருக்கிறார். மலேசிய மனிதாபிமான அமைப்பிடமும் உதவி கேட்டிருக்கிறார்.
குறித்த நபரை காப்பற்ற கம்போடியாவிலுள்ள மலேசியத் தூதரகத்தை உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு அமைப்பு வெளியுறவு அமைச்சைக் கேட்டுக்கொண்டுள்ளது.