பாலியல் குற்றச்சாட்டு – இலங்கை பேராசிரியர் அமெரிக்காவில் கைது!
அமெரிக்காவின் ஃபெர்ரிஸ் மாநிலத்தில் (Ferris State) பல்கைலைக்கழக பேராசியராக கடமையாற்றிய இலங்கையைச் சேர்ந்த ஒருவரை அமெரிக்க குடியேற்ற முகவர்கள் கைது செய்துள்ளனர்.
சுமித் குணசேகர என்ற நபர் நவம்பர் 12 ஆம் திகதி அமெரிக்க குடியேற்ற முகவர்களால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மிச்சிகனில் (Michigan) உள்ள பல்கலைக்கழகத்தில் சந்தைப்படுத்தல் துறையில் உதவிப் பேராசிரியராக கடமையாற்றிய அவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளங்கலைப் பட்டமும், நெவாடா பல்கலைக்கழகத்தில் புள்ளிவிவரங்களில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
குணசேகர பிப்ரவரி 1998 இல் அமெரிக்காவிற்குள் நுழைந்து பின்னர் கனடாவுக்கு இடம்பெயர்ந்ததாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் 1998 இல், ஒன்ராறியோவின் பிராம்ப்டனில் (probation) காவல்துறையினரால் முதல் முறையாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது கொலை மிரட்டல் விடுத்தல், பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டை குணசேகர ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அவர் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்டு ஒரு மாத சிறைத்தண்டனையும் ஒரு வருடம் நன்னடத்தை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
பிறகு செப்டம்பர் மாதம் 2003 ஆம் ஆண்டு லாஸ் வேகாஸில் (Las Vegas) சட்ட அமலாக்க அதிகாரிகளால் மீளவும் கைது செய்யப்பட்ட அவர், ஒழுங்கீன நடத்தைக்காக தண்டனை பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஒரு பாலியல் குற்றவாளி ஒரு அமெரிக்க கல்லூரி வளாகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருவதும், பாதிக்கப்படக்கூடிய மாணவர்களை பலிகடாவாக்குவதற்கான வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டதும் வேதனையளிக்கிறது என DHS உதவிச் செயலாளர் டிரிசியா மெக்லாஃப்லின் (Tricia McLaughlin) கூறினார்.
தற்போது அவர் சிறையில் தண்டனை அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது.





