நியூயார்க் நகரப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான புயல் : நியூ ஜெர்சி வெள்ளத்தில் சிக்கி இருவர் பலி

அமெரிக்காவின் நியூயார்க் நகரைப் புரட்டிப்போட்ட திடீர் வெள்ளத்தில் நியூ ஜெர்சி பகுதியில் இருவர் பலியாகினர். கடுமையான புயலில் கார்களும் ரயில் நிலையங்களும் நீரில் அமிழ்ந்தன.
கொட்டித் தீர்த்த மழையால் வட்டாரத்தின் விமான நிலையங்கள், பெருவிரைவுச் சாலைகள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றின் சேவைகள் நிலைகுத்தின.மென்ஹட்டான் செண்டிரல் பார்க்கில் ஒரு மணி நேரத்துக்குள் மழைநீர் மட்டம் 5 செண்டிமீட்டருக்கு உயர்ந்தது.
ஜூலை 14, மாலையில் பல்வேறு ரயில் நிலையங்கள் வெள்ளக்காடான காணொளிகள் பரவிவருகின்றன.
குறுகிய நேரத்தில் பெய்த கனத்த மழையை ரயில் கட்டமைப்பால் சமாளிக்க முடியவில்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர். ரயில் நிலையங்களில் உள்ள கழிவுநீர் கட்டமைப்பால் ஒரு மணி நேரத்தில் 4.44 செண்டிமீட்டர் மழையைத் தான் கொள்ள முடியும் என்று நகர சுற்றுப்புற பாதுகாப்பு ஆணையர் ரோஹித் அகர்வால் கூறினார்.“இந்த அளவு கனத்த மழையை நான் கண்டதாக நினைவில்லை,” என்றார் அவர்.
பிளேன்ஃபீல்ட் பகுதியில் வாகனம் ஒன்று வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டதில் இருவர் உயிரிழந்ததை அடுத்து நியூ ஜெர்சி ஆளுநர் ஃபில் மர்ஃபி அவசர நிலையை அறிவித்தார்.உயிரிழந்தோரின் பின் மூழ்கிய காரில் கண்டெடுக்கப்பட்டதாக திரு மர்ஃபி செய்தியாளர்களிடம் கூறினார்.
ஒரு சில இடங்களில் 2.5 மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் 15.25 செண்டிமீட்டர் அளவுக்கு மழைநீர் உயர்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.அடிக்கடி ஏற்படும் வானிலை பேரிடர்களுக்கு பருவநிலை மாற்றம்தான் காரணம் என்று மர்ஃபி சாடினார்.