அணை உடைந்ததால் மத்திய சீனாவில் கடும் வெள்ளப்பெருக்கு ; 6,000 பேர் வெளியேற்றம்
ஆசிய நாடுகளைத் தீவிர வெப்ப அலைகள் வாட்டி வதைத்துவரும் சூழலில் சீனாவின் மத்திய பகுதியில் இருக்கும் தடுப்பணை ஒன்றில் ஏற்பட்ட உடைப்புக் காரணமாக அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணியில் அந்நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகச் சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்தது.
சீனாவின் மத்திய பகுதியில் இருக்கும் ஹுனான் மாநிலத்தில் உள்ள டோங்டிங் ஏரியின் தடுப்பணையில் ஜூலை 5ஆம் திகதி மாலை உடைப்பு ஏற்பட்டதாகவும் அது கூறியது.அந்த ஏரிக்கும் அருகிலுள்ள பகுதிகளிலிருந்து கிட்டத்தட்ட 6,000 மக்களை அதிகாரிகள் வெளியேற்றினர் என்றும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அந்நாட்டு அரசு ஊடகமான ‘சிசிடிவி’ குறிப்பிட்டது.
தடுப்பணை உடைந்து ஏரி நீர் அப்பகுதிக்குள் பாய்வதையும் விவசாய நிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்திருப்பதையும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதையும் ‘சிசிடிவி’ வெளியிட்ட காட்சிகளில் பார்க்க முடிந்ததாக ஏஎஃப்பி தெரிவித்தது.கிட்டத்தட்ட அரை மில்லியன் மக்கள் வசிக்கும் ஹுனானின் ஹுவாரோங் பகுதிக்குச் செல்லும் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சாலை கண்காணிப்பு நிலையம் ஜூலை 6ஆம் திகதி கூறியது.
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், வெள்ளத் தடுப்புக்கு உதவும் வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்கள் கடந்து செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக சீனச் சமூக ஊடகமான வெய்போவில் நிலையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
“மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க தேவையான அனைத்து மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்,” என அந்நாட்டு அதிபர் ஸி ஜின்பிங் தெரிவித்ததாக ஜின்ஹுவா ஜூலை 6ஆம் தேதி செய்தி வெளியிட்டது.
தடுப்பணையில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்யவும் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் கிட்டத்தட்ட 800 பணியாளர்கள், 150 வாகனங்கள், படகுகள் ஆகியவற்றை வெள்ளம் பாதித்த பகுதிக்கு அனுப்பியுள்ளதாக அந்நாட்டு அமைச்சு தெரிவித்ததாக சின்ஹுவா கூறியது.