சிங்கப்பூர் தொழில் சந்தையில் ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடி
சிங்கப்பூர் சந்தையில் வேலைவாய்ப்பு பெரியதொரு நெருக்கடியாக மாறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் தொழில்நுட்பம் உட்பட சில துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. எனினும், வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
உலகப் பொருளாதாரம் மெதுவாகச் சென்று கொண்டிருப்பதால், வேலைக்கு உத்தரவாதம் இல்லாத நிச்சயமற்ற நிலை காணப்படுகிறது.
சிங்கப்பூரில் மொத்த வேலைகளின் எண்ணிக்கை மூன்று வீதம் கூடியுள்ளதாக லிங்க்ட்இன் (LinkedIn) தளத்தின் தரவுகள் வெளிப்படுத்துகின்றன.
அதேவேளை, வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக, 11 வீதம் அதிகரித்துள்ளது. இந்த இடைவெளியே வேலைவாய்ப்புச் சந்தையில் கடும் போட்டி நிலவக் காரணம் என்று கருதப்படுகிறது.
புதிய கருவிகளின் வருகை மற்றும் மின்னிலக்கச் சேவைகளுக்கான (Digital Services) தேவை காரணமாக, தொழில்நுட்ப வேலை வாய்ப்புகள் தொடர்ந்தும் 18 மாதங்களாக அதிகரித்து வருகின்றன.
வைத்தியசாலை மற்றும் சுற்றுலாத் துறைகளிலும் வேலை வாய்ப்புகள் உயர்ந்துள்ளன, ஜூன் மாதத்திலிருந்து இந்தத் துறைகளில் வேலை வாய்ப்புகள் சுமார் 65 வீதம் அதிகரித்துள்ளன.
இரு மாதங்களாக வேலை வாய்ப்புகள் குறைந்திருந்த நிலையில், கடந்த மாதம் ஒரு வீதம் அதிகரித்துள்ளது.
எனினும், உலகப் பொருளாதார நிச்சயமற்ற நிலையால், பொதுவாக நிறுவனங்கள் பணியாளர்களை அமர்த்தத் தயக்கம் காட்டுவதாக இன்டீட் (Indeed) நிறுவனம் தெரிவித்துள்ளது.





