கட்டுநாயக்கவில் ஏழு சிரிய பிரஜைகள் கைது

ஐக்கிய அரபு இராச்சியத்தின் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இத்தாலியின் ரோம் நகருக்கு தப்பிச் செல்ல முயன்ற இரண்டு சிரிய குடும்பங்களைச் சேர்ந்த 07 பேர் இன்று (12) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிரியாவில் வசித்து வந்த மூன்று பெரியவர்கள் மற்றும் நான்கு குழந்தைகள் அடங்கிய இரண்டு குடும்பங்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குழுவினர் விமான அனுமதியை முடித்துக்கொண்டு விமான நிலைய குடிவரவு கவுன்டர்களை வந்தடைந்தனர்.
அங்கு பணிபுரிந்த குடிவரவு அதிகாரிகளின் சந்தேகத்தின் பேரில், சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களுடன் எல்லை ஆய்வு பிரிவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப சோதனையில் இந்த கடவுச்சீட்டுகள் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்பிறகு, இந்த சிரியா நாட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், தரகர் ஒருவரிடம் தலா 2,000 அமெரிக்க டாலர்கள் செலுத்தி, துருக்கியில் இந்தக் கடவுச்சீட்டுகளை தயார் செய்தது தெரியவந்தது.
இந்த சிரிய பிரஜைகள் முதலில் மலேசியாவிற்கு வந்து பின்னர் இலங்கைக்கு வந்து பின்னர் இந்தியாவிற்கு சென்று பின்னர் இத்தாலிக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததை குடிவரவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சிரிய பிரஜைகள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.