அமைதி பேச்சுவார்த்தையில் பின்னடைவு – வெள்ளைமாளிகையில் ஒன்றுக்கூடும் ஐரோப்பிய தலைவர்கள்!

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இடையே நாளை (18) வெள்ளை மாளிகையில் நடைபெறும் சந்திப்பில் ஐரோப்பிய தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ், பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப்ஸ் மற்றும் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜி மெலோனி ஆகியோர் நாளை (18) வாஷிங்டனுக்கு பயணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக வெள்ளிக்கிழமை (15) அமெரிக்க ஜனாதிபதிக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் இடையிலான சந்திப்பின் விவரங்களை அறிய ஜெலென்ஸ்கி அமெரிக்கா செல்ல உள்ளார்.
இந்த முக்கியமான கலந்துரையாடலுக்குப் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உக்ரைன் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசி உரையாடலை நடத்த உள்ளார்.