லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது தீவிர ராக்கெட்டுகள் தாக்குதல்!
இஸ்ரேலின் வடபகுதியில் லோயர் கலிலீ என்ற இடம் நோக்கி லெபனான் நாட்டில் இருந்து ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பினர் இன்று காலை ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளனர்
இதனை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தெரிவித்து உள்ளனர்.
எனினும், இவற்றில் சில ராக்கெட்டுகளை இஸ்ரேல் பாதுகாப்பு படையினரின் வான் பாதுகாப்பு பிரிவினர் தடுத்து நிறுத்தி முறியடித்தனர். அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 5.34 மணியளவில், ராக்கெட் தாக்குதல் பற்றிய எச்சரிக்கை விடப்பட்டது.
லெபனானின் எல்லையையொட்டிய ரமோத் நப்தாலி பகுதியில் இந்த எச்சரிக்கை விடப்பட்டது. எனினும், எந்தவித பாதிப்போ அல்லது உயிரிழப்போ பதிவாகவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.
கடந்த வியாழக்கிழமை, ராக்கெட் மற்றும் ஆளில்லா விமானம் ஆகியவற்றை கொண்டு வட இஸ்ரேலின் மீது ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பினர் பெரிய அளவில் நடத்திய தாக்குதலில், இஸ்ரேல் அதிகாரி ஒருவர் பலியானார். தங்களுடைய படை தளபதிகளில் ஒருவர் உயிரிழந்த நிலையில், ஹிஜ்புல்லா அமைப்பினரின் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து, தெற்கு லெபனான் பகுதியில் இஸ்ரேல் படையினர், 200 ராக்கெட்டுகள் மற்றும் வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் 20 ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில், ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 28 வயது இஸ்ரேல் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து உள்ளார். அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.
வடக்கு லெபனானின் பால்பெக் நகர் மீது இஸ்ரேல் படையினர் நேற்றிரவு தாக்குதல் நடத்தியதில், ஹிஜ்புல்லா அமைப்பின் வான் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த மெய்தம் முஸ்தபா ஆல்டார் என்ற முக்கிய நபர் கொல்லப்பட்டார்.