வெளியுறவுத்துறை செயலாளராக மார்கோ ரூபியோவை உறுதி செய்துள்ள செனட்
அமெரிக்காவின் குடியரசுக் கட்சி செனட்டரான மார்க்கோ ருபியோ அந்நாட்டின் புதிய வெளியுறவு அமைச்சராக உறுதிப்படுத்தப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டோனல்ட் டிரம்ப்பின் அரசாங்கத்தில் ருபியோ வெளியுறவு அமைச்சர் பொறுப்பேற்பதற்கு செனட் சபை ஒருமித்த ஆதரவு அளித்துள்ளது. 99-0 என்ற வாக்குக் கணக்கில் அவர் வெளியுறவு அமைச்சராக உறுதிப்படுத்தப்பட்டார்.
அமைச்சரவைக்கு திரு டிரம்ப் நியமனம் செய்தோரில் 53 வயது ருபியோதான் அமைச்சராக உறுதிப்படுத்தப்பட்ட முதல் நபர். மேலும் சில அமைச்சர்களை உறுதிப்படுத்த இந்த வாரம் வாக்கெடுப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கியூபாவிலிருந்து குடிபுகுந்த பெற்றோருக்குப் பிறந்த ருபியோ, சீனாவைக் கடுமையாக விமர்சிப்பவர். மேலும், அவர் இஸ்ரேலுக்கு சாதகமாகப் பேசுபவரும்கூட.
கம்யூனிஸ்ட் ஆட்சியில் இயங்கும் கியூபா, அதன் பங்காளிகள் ஆகியவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறும் ருபியோ குரல் கொடுத்து வந்துள்ளார். குறிப்பாக நிக்கலஸ் மடூரோ அதிபராக இருக்கும் வெனிசுவேலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அவரின் வாதமாக இருந்து வந்துள்ளது.
சீனாவை அதிகம் சார்ந்திராமல் இருக்க அமெரிக்கா தனது போக்கை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று வெளியுறவு அமைச்சராக உறுதிப்படுத்தப்பட்ட பிறகு தாம் ஆற்றிய உரையில் ருபியோ எச்சரித்தார்.