ஜப்பான் – சீனா மோதலுக்கு மத்தியில் தென் கொரியாவுடன் கைகோர்க்கும் சீனா
தென் கொரியா மற்றும் சீனா இடையிலான உறவுகளை முழுமையாகச் சீரமைக்கும் நோக்கில், தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் (Lee Jae Myung) நான்கு நாள் அரசுமுறைப் பயணமாகப் பெய்ஜிங் சென்றுள்ளார்.
2019ஆம் ஆண்டிற்குப் பிறகு தென் கொரியத் தலைவர் ஒருவர் சீனாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்.
நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான 15 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
குறிப்பாக, சீனாவில் தென் கொரியப் பாடல்கள் மற்றும் நாடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வமற்ற தடையை நீக்குவது குறித்து ஜனாதிபதி லீ ஜே மியுங் வலியுறுத்தியுள்ளார்.
ஜப்பான் மற்றும் அமெரிக்காவுடனான சீனாவின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள சூழலில், தென் கொரியாவுடன் நெருக்கமான உறவைப் பேண சீன ஜனாதிபதி ஆர்வம் காட்டி வருகிறார்.
அதேவேளை, வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்த சீனாவின் ஒத்துழைப்பை தென் கொரியா கோரியுள்ளது.
ஜனாதிபதி லீ ஜே மியுங் தனது பயணத்தின் ஒரு பகுதியாகச் சங்காயில் உள்ள கொரிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவிடத்திற்கும் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





