இந்தியாவில் பள்ளி நீர்த்தொட்டி இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் உயிரிழப்பு
பள்ளி வளாகத்திலிருந்த மேல்நிலை நீர்த்தொட்டி திடீரென இடிந்து விழுந்ததில் குறைந்தது மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர், இருவர் காயமுற்றனர்.
இவ்விபத்து இந்தியாவின் அருணாசலப் பிரதேச மாநிலம், நாகர்லாகுன் நகரை அடுத்துள்ள மோடல் எனும் சிற்றூரில் உள்ள செயின்ட் அல்போன்சா பள்ளியில் சனிக்கிழமை (டிசம்பர் 14) நேர்ந்தது.
விளையாடிக்கொண்டிருந்த மாணவர்கள்மீது நீர்த்தொட்டி இடிந்து விழுந்ததாக நாகர்லாகுன் காவல்துறைக் கண்காணிப்பாளர் மிகின் கம்போ தெரிவித்தார்.காயமுற்ற மாணவர்கள் அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு அவர்களில் மூவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
உயிரிழந்த மாணவர்கள் மூவரும் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்தனர். காயமுற்ற மற்ற இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவத்தை அடுத்து, பள்ளி முதல்வர், உரிமையாளருடன் ஆசிரியர் நால்வரையும் காவல்துறை கைதுசெய்து விசாரித்து வருகிறது.
நீர்த்தொட்டியில் அளவிற்குமேல் நீரைத் தேக்கியதால் அது இடிந்துவிழுந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையை அடுத்து சொல்லப்படுகிறது.
அருகிலிருந்த சுவர் இடிந்ததே நீர்த்தொட்டியும் இடிந்து விழக் காரணம் என்று இன்னோர் இந்திய ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.இருப்பினும், அது இடிந்துவிழுந்ததற்கான சரியான காரணத்தைக் கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, பள்ளி மூடப்பட்டு, முத்திரை வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தாரும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.