புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம்: இலங்கை பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறுவதற்கு முன்னர் கசிந்தாக உறுதிப்படுத்தப்பட்ட மூன்று வினாக்கள் தவிர்ந்த மேலும் வினாக்கள் கசிந்திருக்குமாயின் அவை தொடர்பில் காவல்துறையினருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
பதில் காவல்துறைமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அது தொடர்பான முறைப்பாடுகள் கோரப்பட்டுள்ளதாக பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, அருகில் உள்ள காவல்நிலையங்களில் தங்களது முறைப்பாட்டை முன்வைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த முறைப்பாடுகளை நாளை மறுதினத்திற்குள் காவல்நிலையங்களில் பதிவு செய்யுமாறு பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ கோரியுள்ளார்.
2024 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2849 பரீட்சை நிலையங்களில் கடந்த 15 ஆம் திகதி நடைபெற்றது. இதில் 323,879 பரீட்சாத்திகள் கலந்து கொண்டனர்.
இதேவேளை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படுவதற்கு முன்னர் வினாத்தாளைக் கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் ஊடாக பகிரப்பட்ட விடயம் பாரிய சர்ச்சையை ஏற்ப்படுத்தி உள்ளது.