சூடானில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை நிறைவு செய்த சவுதி அரேபியா!
சவூதி அரேபிய இராச்சியமானது தனது குடிமக்கள் மற்றும் சகோதர மற்றும் நட்பு நாடுகளின் பிரஜைகளை சூடானிலிருந்து வெளியேற்றும் அனைத்து மனிதாபிமான நடவடிக்கைகளையும் நிறைவு செய்துள்ளதாக இலங்கைக் குடியரசிற்கான சவூதி அரேபியாவின் தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி தெரிவித்தார்.
இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் சவூத் மற்றும் பட்டத்து இளவரசர் ஆகியோரின் வழிகாட்டுதல்களுக்கு இணங்கவும் மற்றும் உலகின் பல்வேறு நாடுகள் சவூதி அரேபியாவிடம் முன்வைத்த வேண்டுதல்களுக்கு இணங்கவும் இவ்வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சவூதி இராச்சியத்தினால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான வெளியேற்ற நடவடிக்கைகளின் போது மொத்தமாக 8455 பேர் வெளியேற்றப்பட்டனர்.
இவர்களில் 404 சவூதி குடிமக்களும் 32 இலங்கையர்கள் உட்பட 110 நாடுகளைச் சேர்ந்த 8051 பேர்களும் உள் அடங்குவர்.
இவர்கள் சவூதி அரேபிய கடற்படைக்குச் சொந்தமான கப்பல்கள் மற்றும் சவூதி அரேபிய விமானப்படை விமானங்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர்.