பாதியிலே வெளியேறிய சஞ்சு சாம்சன்! அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப் போட்டியின் போது, அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது உடலின் பக்கவாட்டு தசையில் (side strain) ஏற்பட்ட காயம் காரணமாக பேட்டிங் செய்துகொண்டிருந்த போது பாதியிலேயே என்னால் முடியவில்லை என (31) ரன்களுக்கு ரிட்டையர்ட் அவுட் ஆகினார்.
இது அணிக்கு பின்னடைவையாகவும் ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாகவும் அமைந்துள்ளது. அவர் காயத்தில் இருந்து பாதி போட்டியிலேயே வெளியேறிய நிலையில், அவர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா அவர் விளையாடவில்லை என்றால் யார் அணியை வழிநடத்துவார் என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. அது குறித்த சில தகவல்களும் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அடுத்த போட்டி ஏப்ரல் 19, 2025 அன்று நடைபெறவுள்ளது. சாம்சனின் காயம் குறித்து அவர் அளித்த பேட்டியின் அடிப்படையில், இந்தப் போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகமே. பக்கவாட்டு தசைக் காயம் பொதுவாக மீள்வதற்கு 2 முதல் 6 வாரங்கள் வரை ஆகலாம். எனவே, மீண்டும் அவர் பழைய நிலைமைக்கு திரும்புவது என்பது அவருடைய காயத்தை பொறுத்து தான் தெரியவரும். கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்ட தகவல் என்னவென்றால், அவர் அடுத்த போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு தான்.
ஏற்கனவே, சஞ்சு சாம்சன் இதற்கு முன்பு, இந்த ஆண்டு பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் ஐந்தாவது போட்டியில் விரலில் எலும்பு முறிவு காயம் அடைந்திருந்தார். இந்தக் காயத்தால், ஐபிஎல் 2025 தொடங்குவதற்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) புனர்வாழ்வு பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தக் காயத்தால், ஐபிஎல் 2025-இன் முதல் மூன்று போட்டிகளில் சாம்சன் விக்கெட் கீப்பிங் செய்யாமல், வெறும் பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடினார்.
அந்த மூன்று போட்டிகளையும் ரியான் பராக் தான் கேப்டனாகவும் பொறுப்பேற்று அணியை வழிநடத்தினார். எனவே, இப்போது மீண்டும் சஞ்சு சாம்சனுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் ஒரு வேலை சஞ்சுவால் விளையாட முடியவில்லை என்றால் அவருக்கு பதிலாக அணியை ரியான் பராக் வழிநடத்துவார் எனவும் கூறப்படுகிறது.
மேலும், நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது.அடுத்ததாக களமிறங்கிய ராஜஸ்தான் அணி அதே 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. எனவே, போட்டி சூப்பர் ஓவராக மாறியது. முதலில் விளையாடிய ராஜஸ்தான் 11 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் கே.எல்.ராகுல், ஸ்டப்ஸ் 12 ரன்கள் எடுத்து டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வெற்றி பெற செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.