ஜெர்மனியில் கண்டுப்பிடிக்கப்பட்ட சாமுராய் வாள் : ஆச்சரியத்தில் மூழ்கிய ஆய்வாளர்கள்!
ஜெர்மனியின் தலைநகரான பெர்லினின் மையப்பகுதியில் இரண்டாம் உலகப் போரின் குப்பைகளுக்கு மத்தியில் புதைக்கப்பட்ட பல நூற்றாண்டுகள் பழமையான சாமுராய் வாள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நகரின் பழமையான சதுக்கமான மோல்கன்மார்க்கின் கீழ் இருந்த கட்டடம் அந்த காலப்பகுதியில் பாதாள அறையாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
போருக்குப் பிறகு, பாதாள அறையானது மேல் இருந்த கட்டடத்தின் இடிபாடுகளால் மறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் 1960 களில் தெருக்கள் விரிவுபடுத்தப்பட்டபோது சாலையின் அடியில் புதைக்கப்பட்டது.
இந்நிலையில் மோல்கென்மார்க்கின் முன்னாள் பாதாள அறைகளை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் போரின் முடிவில் அவசரமாக அப்புறப்படுத்தப்பட்ட பல்வேறு இராணுவ கலைப்பொருட்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
அதில் பிரதானமானது இந்த வாள். இது ஜப்பானில் இருந்து கொண்டுவரப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
பெர்லின் மாநில தொல்பொருள் ஆய்வாளரும், நகரின் முந்தைய மற்றும் ஆரம்பகால வரலாற்று அருங்காட்சியகத்தின் இயக்குநருமான மத்தியாஸ் வெம்ஹாஃப், இது “ஆச்சரியமான” கண்டுபிடிப்பு என்று விவரித்துள்ளார்.