‘சலோ இந்தியா’திட்டம் : OIC கார்டுதாரர்களின் நண்பர்களுக்கு ஒரு லட்சம் இ-விசா வழங்க அரசு முடிவு
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இந்தியாவுக்கு ஈர்க்கும் முயற்சியாக ‘சலோ இந்தியா’ எனும் முன்னோடித் திட்டத்தை இந்தியா செயல்படுத்துகிறது.இந்தத் திட்டத்தின்கீழ் புலம்பெயர்ந்த இந்தியக் குடிமக்களின் ‘நண்பர்கள்’ இந்தியா செல்ல இலவச விசாவைப் பெறலாம்.
OCI (Overseas Citizen Of India) அட்டை வைத்துள்ள வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவராலும் பரிந்துரைக்கப்படும் ஐந்து வெளிநாட்டினர் இலவச இ-விசாவிற்குத் தகுதி பெறுவார்கள். அதற்கான சிறப்பு இணையத் தளத்தில் அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
அரசாங்கப் பதிவுகளின்படி, கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் பேர் OIC அட்டை வைத்திருக்கின்றனர். ஒவ்வொருவரும் ஐவரைப் பரிந்துரைக்க முடியும் என்றாலும், இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மொத்த இலவச இ-விசாக்களின் எண்ணிக்கை 100,000 என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறப்பு இணையத் தளத்தில் OIC அட்டைதாரர்கள் தாங்கள் பரிந்துரைக்கும் நண்பர்களின் விவரங்களைப் பதிவு செய்யவேண்டும். சரிபார்ப்புக்குப் பிறகு அவர்களுக்கு ஒரு தனிப்பட்ட குறியீடு ஒதுக்கப்படும். நியமிக்கப்பட்ட நண்பர்கள் இலவச விசாவைப் பெற சிறப்புக் குறியீட்டைப் பயன்படுத்தலாம்.
இந்தியாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் இங்கிலாந்து நாட்டவர்கள் கிட்டத்தட்ட 1.9 மில்லியனாக மூன்றாவது இடத்தில் உள்ளனர். ஆக அதிக அளவிலான புலம்பெயர்ந்த இந்தியர்கள் இங்கிலாந்தில் வசிக்கின்றனர்.
சுற்றுலா அமைச்சு நவம்பர் 5 முதல் 7 வரை லண்டனில் நடைபெறும் உலகப் பயணச் சந்தையில் பங்கேற்கிறது.
கொவிட்-19 தொற்றுநோய் பரவலைத் தொடர்ந்து இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுப் பயணிகள் எண்ணிக்கை தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்கு இன்னும் திரும்பவில்லை. 2022, 2021ஆம் ஆண்டுகளில் முறையே 6.19 மில்லியன், 1.52 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வந்துள்ளனர். இது 2019இல் 10.93 மில்லியனாக இருந்தது.
கடந்த 2023ஆம் ஆண்டில் மொத்தம் 9.5 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் 0.92 மில்லியன் பேர் இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள்.