சஜித்தின் கொடும்பாவி எரிப்பு: 28 ஆம் திகதி பதிலடி!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விவகாரம் தொடர்பில் தமது கட்சிமீது முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று அறிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் எதிரணி உறுப்பினர்கள் சிலர் எதிரான கருத்தை முன்வைத்தனர் என சுட்டிக்காட்டி, மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் நேற்று போராட்டங்கள் இடம்பெற்றன.
இதன்போது சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ச உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன.
இந்நிலையிலேயே நாடாளுமன்றத்தில் இன்று சஜித் மேற்கண்டவாறு கூறினார்.
“பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது. குறித்த அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தின்போது இதற்குரிய உரிய பதில் வழங்கப்படும்.
பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் அரசாங்கத்திடம் இருந்து எங்களுக்கு உபதேசம் அவசியமில்லை.
மலையக மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு ரணசிங்க பிரேமதாசவே நடவடிக்கை எடுத்தார் என்பதை மறக்க வேண்டாம்.” எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
பெருந்தோட்ட அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதம் எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





