இலங்கை மீண்டெழ ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் உதவி கோருகிறார் சஜித்!
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதி Takafumi Kadono ஐ எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று சந்தித்து பேச்சு நடத்தினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
டித்வா சூறாவளி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே மேற்படி சந்திப்பு நடந்ததாக எதிர்க்கட்சி தலைவரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
“இலங்கை வங்குரோத்து நிலையை எதிர்கொண்டிருந்தது. அவ்வேளை நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியான்மைகள் மற்றும் தொழில்முனைவோரை தொழில் ரீதியாக கட்டியெழுப்புவதற்கு உதவி வழங்கப்பட்டது.
ஆசிய அபிவிருத்தி வங்கி 100 மில்லியன் டொலர் தொகையை நன்கொடையாக வழங்கியமைக்கு எதிர்க்கட்சி தலைவர் இதன்போது நன்றி தெரிவித்தார்.
அத்துடன், தற்போதைய பேரிடர் நிலையைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அழிவுகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெளிவுபடுத்தினார்.
இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கை மீண்டும் எழுந்து நிற்பதற்குத் தேவையான ஆதரவுகளைப் பெற்றுத் தருமாறும் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.





