தாய் வீடு திரும்புகிறார் சஜித்: சாவிக் கொத்தை கையளிப்பாரா ரணில்?
“ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைவதற்குரிய சாதகமான சமிக்ஞைகள் தென்பட்டுள்ளன.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.எம். மரிக்கார் எம்.பி. தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (31) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஒரு குடையின்கீழ் இருந்த கட்சிதான் தற்போது இரு அணிகளாக பிளவுபட்டுள்ளன. எனவே, மீள் இணைவு என்பது கடினமாக இருக்காது.
இரு கட்சிகளின் கொள்கைகளும் ஒத்துப்போகின்றன. மேற்படி கட்சிகளின் சங்கமமானது 2026 ஆம் ஆண்டில் நிச்சயம் சாத்தியப்படும்.
இடதுசாரி ஆட்சியெனக் கூறிக்கொண்டு ஏதேச்சாதிகாரமாக செயல்படும் இந்த என்.பி.பி. அரசுக்கு எதிராக வலதுசாரிகள் ஒன்றுபட வேண்டும்.” – என்றார் எஸ்.எம். மரிக்கார்.
அதேவேளை, ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான நேரடி சந்திப்பும் இம்மாதம் நடக்கவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை சஜித் பிரேமதாச ஏற்க வேண்டும் என கட்சி ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலைமைப் பதவியை விட்டுக்கொடுப்பதற்கு தயார் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறி இருந்தாலும், இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.





