ஜேர்மனுக்கான விமான சேவைகளை குறைக்கும் ரயன்ஏர் (Ryanair) விமான நிறுவனம்!
ஐரோப்பிய நாடுகளில் குளிர் பருவம் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் ரயன்ஏர் (Ryanair) விமான நிறுவனம் கணிசமான விமானங்களை குறைப்பதாக அறிவித்துள்ளது.
அறிவிப்பின்படி ஜெர்மனிக்கு செல்லும் சில விமானங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் பெர்லின் (Berlin), ஹாம்பர்க் (Hamburg) மற்றும் மெம்மிங்கன் (Memmingen) உட்பட ஒன்பது விமான நிலையங்களில் 24 வழித்தடங்கள் இரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 2024 முதல் விமான வரி உயர்வை திரும்பப் பெறுவதற்கும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கட்டணங்களைக் குறைப்பதற்கும் பெர்லின் தனது கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறியமையால் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரயன்ஏர் Ryanair விமான நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி டாரா பிராடி (Dara Brady) நலிவடைந்துள்ள ஜெர்மன் விமானப் போக்குவரத்து அமைப்பை சீர்திருத்த அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நாட்டு போக்குவரத்து அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் மேற்படி கோரிக்கையை நிறைவேற்றத் தவறினால் அதன் சேவைகளை மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு விரிவுப்படுத்துவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.





