தாய்லாந்தில் தனது மகனைக் கடலுக்குள் வீசி எறிந்து கொன்றதாக ரஷ்ய சுற்றுலாப் பயணி மீது குற்றச்சாட்டு
படகிலிருந்து தம்முடைய 13 வயது மகனைக் கடலுக்குள் வீசியெறிந்து கொன்றதாகத் ரஷ்யச் சுற்றுப்பயணி ஒருவர்மீது தாய்லாந்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.அங்குள்ள பாங் நுகா கோ ரா தீவில் வியாழக்கிழமை (ஜனவரி 23) மாலை 4 மணியளவில் இந்த அதிர்ச்சிச் சம்பவம் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.
தாய்லாந்து, ரஷ்யா என இரட்டைக் குடியுரிமை பெற்றிருந்த அச்சிறுவன், கடலிலிருந்து மீட்கப்பட்டு குராபுரி சாய் பட்டானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். ஆயினும், தலையிலும் முகத்திலும் கடுமையாகக் காயமுற்றிருந்த அவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
படகின் உந்துசுழலியால் (Propeller) அவன் காயமடைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
அர்ட்டெம் புகோர்ஸ்கி என்ற அந்த ஆடவர், லூக்கஸ் என்ற தன் மகனைக் கடலுக்குள் தூக்கி வீசியபின் தானும் கடலுக்குள் குதித்ததாகச் சம்பவத்தைக் கண்டவர்கள் கூறினர்.
அப்படகில் 16 வெளிநாட்டவர்கள் உட்பட 33 சுற்றுப்பயணிகளும் ஐந்து ஊழியர்களும் இருந்தனர்.
புகோர்ஸ்கி தன் மகனைக் கடலுக்குள் தூக்கி வீசியதையும் பின்னர் அவரும் குதித்ததையும் கண்ட மாலுமி, உடனடியாகப் படகை நிறுத்தினார். இருவரையும் மீட்க அவர் முயன்றபோதும் புகோர்ஸ்கி படகில் ஏற மறுத்ததாகச் சொல்லப்படுகிறது.அதனையடுத்து, படகு ஊழியர் ஒருவர் கடலுக்குள் குதித்து லூக்கசை மீட்டார். அதன்பின் புகோர்ஸ்கியும் மீட்கப்பட்டார்.
படகை மாலுமி கரைக்குத் திருப்பியதும் லூக்கஸ் விரைந்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
பின்னர் புகோர்ஸ்கி கைதுசெய்யப்பட்டு, அவர்மீது நோக்கத்துடன் கூடிய கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால், அவர் தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.