ஜப்பான் வான்வெளியில் வட்டமிட்ட ரஷ்ய ராணுவ விமானங்கள்…
ரஷ்யாவுக்குச் சொந்தமான இரண்டு ராணுவ விமானங்கள் ஜப்பானை வட்டமிட்டதாக ஜப்பானிய ராணுவம் தெரிவித்துள்ளது.இந்தச் சம்பவம் செப்டம்பர் 12ஆம் திகதியன்று நிகழ்ந்தது.
அந்த இரு ரஷ்யப் போர் விமானங்களும் ஜப்பானிய வான்வெளிக்குள் அத்துமீறி நுழையாதபடி பார்த்துக்கொள்ள தனக்குச் சொந்தமான போர் விமானங்களை ஜப்பான் உடனடியாக அனுப்பி வைத்தது.
அந்த இரு ரஷ்ய விமானங்களும் ஜப்பானிய வான்வெளிக்குள் நுழையவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
ஜப்பானை வட்டமிட்ட அந்த இரு ரஷ்ய ராணுவ விமானங்களும் சுற்றுக்காவல் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுபவை என்று அறியப்படுகிறது.
இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டில் ரஷ்ய ராணுவ விமானம் ஒன்று ஜப்பானை வட்டமிட்டதாக ஜப்பானிய அதிகாரி ஒருவர் செப்டம்பர் 13ஆம் திகதியன்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
செப்டம்பர் 12ஆம் திகதி காலை முதல் பிற்பகல் வரை ரஷ்யாவுக்குச் சொந்தமான அந்த இரண்டு Tu-142 ரக விமானங்கள், ஜப்பானுக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் உள்ள கடலுக்கு மேல் பறந்தன.
அங்கிருந்து அவை ஜப்பானின் ஒக்கினாவா தீவுகளின் தென்பகுதியை நோக்கிப் பறந்ததாக ஜப்பானியத் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை வெளியிட்டது.அதன் பிறகு, அந்த விமானங்கள் வடக்குத் திசையை நோக்கி பசிபிச் பெருங்கடலுக்கு மேல் பறந்துச் சென்றதாகவும் வடஹொக்காய்டோ தீவு அருகில் பறந்து பயணத்தை முடித்துக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஜப்பானும் ரஷ்யாவும் உரிமை கொண்டாடும் இடத்துக்கும் மேல் அந்த இரு விமானங்களும் பறந்ததாக ஜப்பானிய அதிகாரிகள் கூறினர்.