வட கொரியாவிற்கு சாலைப் பாலம் கட்டும் பணியை விரைவில் தொடங்கவுள்ள ரஷ்யா

ரஷ்யாவும் வடகொரியாவும் இருநாடுகளையும் இணைக்கும் சாலைக்கான கட்டுமானப் பணிகளைக் கூடிய விரைவில் தொடங்கவிருக்கின்றன.
ரஷ்யாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான டூமன் ஆற்றுக்கு மேல் சாலை அமையவிருப்பதாய் வடகொரியாவுக்கான ரஷ்யத் தூதர் தெரிவித்தார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் சென்ற ஆண்டு வடகொரியா சென்று விரிவான உத்திபூர்வப் பங்காளித்துவ உடன்பாட்டைச் செய்துகொண்டபோது சாலையை அமைக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.
புதிய இணைப்புச் சாலை தற்போதிருக்கும் ‘ஃப்ரெண்ஷிப் பிரிட்ஜ்’ என்ற ரயில் பாலத்துக்கு அருகே கட்டப்படும். அது கொரியப் போருக்குப் பின் 1959ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
பாலத்தைக் கட்டுவதற்கான பணிகள் இன்னும் தொடங்கவில்லை என்ற ரஷ்யத் தூதர் இருதரப்பும் ஆயத்த வேலைகளைச் செய்துவருவதாகச் சொன்னார்.
பல ஆண்டாகக் கலந்துரையாடப்படும் இணைப்புச் சாலை, 850 மீட்டர் நீளத்தில் ரஷ்ய பெருவிரைவுச் சாலைக் கட்டமைப்புடன் வடகொரியாவை இணைக்கும்.
இருப்பினும் தென்கொரிய துணைக்கோளப் படங்களின் அடிப்படையில் மார்ச் 5ஆம் தேதி பாலத்துக்கான அடித்தளத்துக்கும் சாலை இணைப்புக்குமான பணிகள் தொடங்கிவிட்டதாக எஸ்ஐ அனலெட்டிக்ஸ் நிறுவனம் தெரிவித்தது.